Tuesday, May 29, 2007




கார்மேகங்கள் பல கடந்து போயிருக்கின்றன..
கண் திறந்ததில்லை...
என் பாலைவனத்தில் பொழிந்த
முதல் மழை...
நீ..

மணிக்கொருதரம் என்னை புரட்டிப்போட்டு
உருமாற்றிக்கொண்டிருக்கும் காற்று,
என்ன முயன்றும் தோற்றுப் போனது..
என் அடியாழம் தேடமுயன்ற
உன் ஈரத்தின் பிடிப்பு..

நீர்த்தடமே அறியாமல் இருந்த என்
கள்ளிச்செடிகள் வேர்வரை
நனைந்தன...
பசேலென மாறின சட்டென்று மகிழ்ச்சியில்..
நம்பிக்கை வந்தது - நாளை
பூக்கள் கூட பூக்கலாமென்று...

கண்கட்டி வித்தை செய்யும் என்
கானல் நீர்
ஊற்று நீரான மாயம்..
என் பாலைவனத்திலும் சோலை..
பச்சை பசேல் தாவரங்கள்..
பளிச்சென்ற நிறங்களில் மலர்கள்..

இரவுகளின் ஈரப்பதம்..
நிலவொளியின் குளுமை..
வசந்தத்தின் வருகை..
நீரின் சுவை..
மலர்களின் வாசம்..
மண்வாசனை..
உணரமுடிகிறது இப்போது..

எத்தனையெத்தனை மாற்றங்கள்
என்னில் - உன்
ஒரே வருகையில்..
என்னுருவம், வாசம், என் காற்றுமண்டலம்
என அனைத்தும்..


மனம் ஏங்குகிறது இப்போது..
எப்போது வரும்
என்னுள்
எப்பொழுதும்
மழைக்காலம்..


LinkWithin

Related Posts with Thumbnails