Saturday, February 27, 2010

ஆழ்வெளியில் உதிர்ந்த சிறகு




ஆளரவமே அறியாத
அடையாளமும் இல்லாத
ஏதோ ஒர் அந்தரத்தின்
எங்கோ ஒரு விளிம்பிலிருந்து
தவறி
விழுந்துக்கொண்டே இருக்கிறேன்...
இருட்டுவழியில் முடிவில்லா
இந்த வீழ்பயணமும்
சுகமாகத் தான்
இருக்கிறது
உனக்கான என்
காத்திருத்தலைப் போல...

ஒரு குளிர்மாலையின்
பனியை போல
இதமாய்த் தான்
இறங்கிக்கொண்டிருந்தது
மெல்ல முதுகுத்தண்டில்
கூரூசியாய் ஏறி
உறையவைக்கும் வரை...
உன் பாராமுகம்...

எவ்வளவு இருந்து என்ன
என் அன்பை வெளிப்படுத்த முடியா
வார்தைகள் ஒவ்வொன்றும்
குற்றவுணர்ச்சியில் மடிந்து கொண்டிருக்கின்றன
நெஞ்சுகுழியின் உள்ளேயே...

உனக்கான எனது
யாகத்தின்
வேள்வித்தீயில்
என்னையே அர்ப்பணித்து
வராத கடவுளரிடம்
யாருக்கான வரங்கள்
கேட்பது
இல்லாமல் போன
வாழ்க்கைக்கு...

மெல்ல சாம்பலாகிக்கொண்டிருக்கிறது
என்
கடைசி விறகு...

Saturday, February 6, 2010

ஒற்றைச் செருப்பு...




எதைக் குறைசொல்வது
தொலைத்ததையா
தொலைந்தததையா
தொலையாமல் போயிருந்தும் தன்
அடையாளம் தொலைத்திருக்கும்
மற்றொன்றையா...
தான் கடக்கவேண்டிய தூரம்
இருத்தலின் நோக்கம்
அனைத்தும் மறந்தும் மறக்கப்பட்டும்
யாருக்கும் பயனின்றி
பரிதாபம் கூட மிச்சமில்லாமல்...
நீ தொலைத்த நம்பிக்கையும்
நம்பிக்கை தொலைந்த வாழ்க்கையும்
இந்த ஒற்றைச் செருப்பைப் போலவே..

Photo Courtesy : Makka Photography

LinkWithin

Related Posts with Thumbnails