Sunday, March 21, 2010

நம்பிக்கையின் கடவுள்...



Hope Originally uploaded by cknara

பசியில் மெதுவாய் எட்டிப் பார்த்திருக்கும்
எனது கண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது
எம் வறுமையைப் போலவே....
இழுத்துப் பிடிக்கும் வயிற்றைப் போல
இறுக்கிக் கொண்டிருக்கிறது
தாளாத் துயரின் கோரப்பிடி...

எதிர்துருவமாய் இருக்கிறது என் வாசலுக்கு
வெளியேயான உலகம்...
விளையாட்டுப் பொருட்களுக்காய் அழுது
அடம்பிடிக்கும் என் வயது சிறுவர்கள்...
என் கண்ணீரோ மெல்ல தொலைந்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கைக்கும் அதனுடன் சேர்ந்து
மூழ்கிக்கொண்டிருக்கும் என் கனவுகளுக்கும்...

வழுக்கிக் கொண்டு செல்லும் வெப்பம் தீண்டாத
இசையில் அதிர வைக்கும் சொகுசு ஊர்திகள்...
செருப்பு தேய இடமில்லாமல் தானும் தேய்ந்து
காய்ப்பு காத்திருக்கும் என் பாதங்கள்...

பாலும் பஞ்சாமிர்தமுமாய் குளியல்கள்
எம் கடவுள்களுக்கு...
வீசியெறியப்பட்ட ரொட்டித்துண்டு ஒன்றினை
யாரும் பார்க்கும் முன்னர் பொறுக்கியெடுக்கும்
எனது கைகள்...

மண்ணைத்தின்ற வாயிலும்
என் ஆடைக்கிழிசல்களின் இருளிலும்
இன்னொரு உலகம் காட்டிகொண்டிருக்கும்
நானும்
கடவுளின் பிரதி தான்...
சொல்லிய அத்தனைக்கும்
சொல்லாமல் போன எத்தனையோவற்றிற்கும்
எதுவுமே செய்ய முடியாமல் போன
நம்பிக்கைகள் மட்டுமே மிச்சமிருக்கும்
கடவுளின் இன்னொரு பிரதி...

நானும் ஓர்
நம்பிக்கையின் கடவுள்...

LinkWithin

Related Posts with Thumbnails