
துண்டுப்பிரசுரங்கள்
விநியோகிப்பதைப் போல
கடந்து போவோரிடம்
ஏதாவது ஒன்றை
திணித்தே தீரவேண்டுமென்ற
ஆவல்கள் ஆச்சரியமளிப்பவை
இனம் புரியாதவை
விடைகள் பெரும்பாலும்
அவசியமில்லை
கேட்பது மிக முக்கியம்
விடை என்னவாயிருக்குமென
தெரிந்திருந்தும்
எவ்வளவு சுலபமாய்
வீசப்படுகிறது
ஒவ்வொரு கேள்வியும்
குதர்க்கமாய்
குறுகலாய் கூர்மையாய்
எகத்தாளமாய்
புன்னகை
புறக்கணிப்பு
பதில் கேள்வி
மெளனம்
கோபம்
எரிச்சல்
மரியாதைக்காய்
ஒரு வார்த்தை
என ஏதேனும் ஒன்றினால்
எதிர்கொள்கிறேன்
சொல்லக்கூடிய
பதில்களின் வரிசை
முறுவலுடன்
விரைந்து மறைய
எனினும்
அடுத்தவர் எல்லைக்கோட்டில்
நிற்கும் பிரக்ஞை அற்றிருக்கும்
உங்களிடம்
ஒருமுறையேனும்
சொல்ல முயற்சிக்கிறேன்
என் மூக்கு நுனியை உரசாமல்
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என