Wednesday, August 17, 2011

அமீபாவின் கால்கள்



ம‌க‌ள் அறிவிய‌ல் உண்மைக‌ள்
ப‌டித்துக் கொண்டிருந்தாள்
அமீபா ஒர் செல் உயிரி
அமீபாவுக்கென்று த‌னி உருவ‌ம் இல்லை
அமீபாவுக்கு கால்க‌ள் கிடையாது
த‌ன் உருவ‌த்தின் நீட்சியாக‌
கால்க‌ள் போன்ற‌
பொய்க்காலிகளைக் கொண்டது
அம்மா கேட்டியா’வென‌
ஆச்ச‌ரியப்ப‌ட்டுக் கொண்டாள்

பின் த‌மிழ்ப்புத்தகத்தை எடுத்து
பெண் சுத‌ந்திர‌ம் ப‌ற்றிய பாடமொன்றை
ப‌டிக்க‌த் தொட‌ங்கினாள்

அதில் ஆர்வ‌ம் இல்லாம‌ல்
உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தை எடுத்துவைத்துக்கொண்டு
ஆராய்ந்தாள்
ஆப்பிரிக்காவில் அடிமைக‌ள் இருக்கின்ற‌ன‌ராமே
உண்மையா அம்மா என்றாள்

அமீபாவின் பொய்க்காலிக‌ளைப் போன்ற‌
பெண் சுத‌ந்திர‌த்தைப் பெற்ற அடிமைக‌ள்
எங்கேயும் உள்ள‌ன‌ர் என்றேன்
நிதானமாய் பாத்திரங்களைக் கவிழ்த்தபடி

போம்மா ஒண்ணும் புரிய‌லை
என‌ விளையாட‌ ஒடிவிட்டாள்
திரும்பி பார்த்தேன்
சும்மா உட்கார்ந்து செய்தித்தாள்
ப‌டித்துக்கொண்டிருந்த‌வ‌ரும்
ச‌ட்டையை மாட்டிக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தார்!



Friday, June 3, 2011

இருளினூடே சில இசைக்குறிப்புகள்…



நமக்கான இறுதி முடிவை
நாளை சொல்வதாய் நீ
சொல்லி போன அந்த நாளின்
தீராமல் நிலவொளி வடிய
நீண்டு கொண்டே இருந்த
பின்னரவில் தான்
அந்த வயலின் இசை
மெல்ல
அறைக்குள் நுழைந்து
முழுவதுமாய் நிறைந்தது
அதன் சோகம் தாக்கி
உன் முடிவு குறித்து நினைவு திரும்ப
சடசடவென இசைக்குறிப்பின்
குறியீடுகளாய் உதிரத் தொடங்கியது
அடுக்குகள் மாறி விளையாட்டு காட்டி
துள்ளலான இசையாய் மீண்டும்
படர்ந்தது
மெல்லிய‌ விடியல் ஒளியில்
நம்பிக்கைக் கீற்றுத் தெரிய
உறங்கிப்போன என்னை
எழுப்பிய உன் அழைப்பில்
உன் குரல்
இயல்பானதாய் இல்லை
உன் முடிவும்.
எதிர்பார்த்தது போலவும்
எதிர்பாராதது போலவும்.
தளர்ந்து போய் அந்த
இசைக்குறிப்புகளைத் தேடினேன்
விட்டத்தின் அரித்த மிச்சங்களைப் போல
தரையில் தூசியாய் விழுந்திருந்தன
அதன் பின் அந்த‌
வயலின் இசைக்கவே இல்லை

Wednesday, May 18, 2011

மே 18க்காக‌..




வெறித்த‌ விழிக‌ளில்
தேங்கிய வலி மீறி
நோக்கும் வெளி முழுதும்
விரிகிற‌து
நிறைவேறாக் க‌ன‌வுக‌ள்

துளிர்த்த‌ ஒரு
இர‌த்த‌த்துளிக்காய்
எழுந்த‌ ப‌த‌ற்ற‌ம் பார்த்து
விர‌க்தியாய் சிரிக்கிற‌து
வெடித்து சித‌றிய‌
ச‌தைத்துணுக்கு ஒன்று

குவியும் பிணங்களில்
எரியும் ஜெலட்டின் குச்சிகளின்
ம‌ர‌ண‌ வாசம்
மெல்ல கடந்து செல்கிறது
புத்தரின் சிரிப்பை

ஆயுதங்கள் சட்டம் ஒழுங்கு
எல்லை அரசு இயந்திரம்
பதவி மோகம் இனவெறி
அனைத்தையும் பிளந்துவிழுங்கிவிட
யோசித்துக்கொண்டிருக்கிறாள்
பூமியன்னை

உறைந்த உதிரக்கறைகளில்
நிழலாடும்
புன்னகைக்கும் சிசுக்கள் மட்டும்
க‌ட‌வுளிட‌ம் காட்டும்
திசையெங்கும்
விடியலின் ஒளியில்
ம‌ல‌ர்ந்திருக்கிற‌து
வெள்ளை வெள்ளையாய்ப்
பூக்க‌ள்


Thursday, April 21, 2011

முத்தப்பொழுதுகள்…



எழுந்து கொள்ள
அறவே விருப்பமற்ற
ஒரு காலையில்
இமைகளின் மேல்
இன்னமும்
அமர்ந்திருக்கின்றன
நேற்று இரவில்
தூங்கச்சொல்லி
நீ
கொடுத்துப்போன
இரண்டு முத்தங்கள்

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

ஒரு முறையாவது
எண்ணிவிட நினைக்கிறேன்
நீ இறைத்துப் போகும்
முத்தங்களை
ஒன்று..இரண்டு..மூன்று
நா…ன்…கு..
ஐ…
இதழ்களும் மனமும்
இழந்து தவிக்கும் தருணம்
குறும்புடன் புன்னகைத்து
சொல்கிறாய்
முதலில் இருந்து
ஆரம்பி என


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

அண்டார்டிகாவில் சூரியன்
இருபது மணி நேரம் இருக்கும்
தெரியுமா
பென்குவின்ஸ் பார்க்க
அது தான் சரியான இடம்
ஒரு முறையேனும்
போகவேண்டும்
ஆர்வத்துடன்
என் வெகு நாள் கனவை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இழைத்தெடுத்த உன் முத்தங்களை
அள்ளித் தெளிக்கிறாய்
உறைந்து கிடக்கும் ஒரு நொடியில்
காதுகளில்
கிசுகிசுக்கிறாய்
எப்ப போகணும் அண்டார்ட்டிகா என்று
அண்டார்டிகா’வாவது!
ஆத்தங்கரையாவது!


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

சிதறி விழுந்த
முத்தங்களின்
நதி தீராமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நம் வீட்டு வாசலில்
தொட‌ங்கி
காற்றில் பன்னீர் தெளிப்பது போல
சாரல் தெறிப்பது போல‌
மெல்ல
ஊர் முழுக்க பரவுகிறது
நம்
முத்தச்சத்தம்


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

நீ தூங்கச்சொல்லி
கொடுத்துப்போன‌
முத்தங்கள் அனைத்தும்
இமைகளை ஊடுருவி
கனவில் கரைந்து
வண்ணங்களாய் குழைந்து
நட்சத்திரங்களாய்
மினுக்குகின்றன
எனக்கான வானில்
என் இரவு முழுவதும்


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

உச்சந்தலை முகர்ந்து
நெற்றியில் நீ
கொடுக்கும் முத்தமே
மிகப்பிடித்தது என்கையில்
என்ன காரணம் கேட்கிறாய்
காதல் கடந்து காமம் கடந்து
உன் ஆண்மையின்
தாய்மைச்சாயல் தெரியும்
தருணம் என
சொல்லிமுடிப்பதற்குள்ளேயே
நெற்றியில் விழுந்த
முத்தத்திற்காய்
கண்கள் மூடி
புன்னகைக்கிறேன்
இம்முறை விழுந்தது
நெற்றியில் அல்ல!

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

காத‌ல‌ர் தின‌ப்பதிவு போட்டிக்காக‌ அலுவ‌ல‌க‌ வ‌லைப்ப‌திவு குழும‌த்தில் எழுதி ப‌ரிசு பெற்ற‌ க‌விதைப்பதிவு ;)





Wednesday, February 9, 2011

அநாவசியமாய் ஒரு கேள்வியும் பதிலும்





துண்டுப்பிரசுரங்கள்
விநியோகிப்பதைப் போல
கடந்து போவோரிடம்
ஏதாவது ஒன்றை
திணித்தே தீரவேண்டுமென்ற‌
ஆவல்கள் ஆச்சரியமளிப்பவை
இனம் புரியாதவை

விடைக‌ள் பெரும்பாலும்
அவ‌சிய‌மில்லை
கேட்ப‌து மிக‌ முக்கியம்
விடை என்னவாயிருக்குமென‌
தெரிந்திருந்தும்

எவ்வ‌ள‌வு சுல‌ப‌மாய்
வீச‌ப்ப‌டுகிற‌து
ஒவ்வொரு கேள்வியும்
குத‌ர்க்க‌மாய்
குறுகலாய் கூர்மையாய்
எகத்தாளமாய்

புன்ன‌கை
புற‌க்க‌ணிப்பு
ப‌தில் கேள்வி
மெள‌ன‌ம்
கோப‌ம்
எரிச்ச‌ல்
ம‌ரியாதைக்காய்
ஒரு வார்த்தை
என‌ ஏதேனும் ஒன்றினால்
எதிர்கொள்கிறேன்
சொல்லக்கூடிய
ப‌தில்களின் வரிசை
முறுவலுடன்
விரைந்து மறைய‌

எனினும்
அடுத்த‌வ‌ர் எல்லைக்கோட்டில்
நிற்கும் பிர‌க்ஞை அற்றிருக்கும்
உங்களிடம்
ஒருமுறையேனும்
சொல்ல‌ முயற்சிக்கிறேன்
என் மூக்கு நுனியை உர‌சாம‌ல்
கொஞ்ச‌ம் த‌ள்ளி நில்லுங்க‌ள் என‌

LinkWithin

Related Posts with Thumbnails