
இலை நுனியில்
திரண்டு நிற்கும் துளியைப்போல்
உணர்ந்திருந்தேன்
எந்நேரமும் உதிர்ந்துவிடுவதை போல....
இலைகளெல்லாம் உதிர்ந்த பின்னும்
துளிர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று இப்போது தானே
தெரியவருகிறது..
திடீரென பயனுள்ளதாய்
படர்ந்திருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரம்
வரையிலான வாழ்க்கை....
உலகம் முழுதும்
அழகாய்த் தெரிகிறது..
என்னைச் சுற்றிலும் நல்லவர்களாய்..
எப்போதாவது
கெட்டவராய்த்
தோன்றுபவர்களும்
சுவாரஸ்யமானவர்களே...
ஏதோ ஓர் மொட்டு எங்கேயோ
எப்போதும் மலர்ந்து கொண்டேயிருக்கிறது..
பிடித்தமான பாடல் ஒன்று என்
காற்று மண்டலத்தில் இசைத்துக் கொண்டேயிருக்கிறது..
புன்னகை பகிர்தல்கள்
நம்பிக்கை வார்த்தைகள்
சிறு தொடுதல்கள்
செல்ல ஊடல்கள்
சின்ன விசாரிப்புகள்
உற்சாக உள்ளங்கள்
அக்கறைப் பார்வைகள்
அழகான வாழ்த்துக்கள்
புதிதாய் பயணங்கள்
நேசமாய் நண்பர்கள்
இவையனைத்தும்
இருக்கும் வரையில்
வாழ்தல்
உற்சாகமானது தான்..
நம்பிக்கை பூக்கள் இருபுறமும்
தினமும் பூக்கும் சாலையில்
நெஞ்சம் முழுக்க அந்நறுமணத்தை நிரப்பியபடி
புதிதாய்
புதியதாய்
துவங்குகிறேன்
என் விட்டுப்போன பயணங்களை...