Thursday, December 31, 2009

மரணம் உதிரும் மணித்துளிகள்



காய்ந்த சருகுகள் உடைவதைப் போல
நொறுக்கி விட்டு போயிருக்கிறாய்
உன் காலடியில்
என் கண்ணாடி உணர்வுகளை..
அப்போதும் தம் கூர்முனைகளை
மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன
உன் பாதங்கள் கீறிவிடாத படிக்கு...

விரக்திப் புழுக்கள் மேய்ந்துகொண்டிருக்கின்றன
ஆறாமலும் ஆற்றப்படாமலும்
போன
அழுகிக்கொண்டிருக்கும்
என் மனக்காயங்களின் மீது...

செதில் செதில்களாய் உதிர்ந்துக்கொண்டிருக்கும்
உயிரற்றுப் போன என உணர்வுகளும்
உணர்வற்றுப் போன என் இதயமும்...

மரணத்தின் பயம் சிறிதுசிறிதாய்
குறைந்து கொண்டே வருகிறது
தினம் அனுபவிப்பதாலோ என்னவோ

மரணத்தின் நேரம் நிச்சயிக்கப்பட்டது
ஆனால் அறியப்படாதது..
ஒன்று மட்டும் அறியமுடிகிறது
இன்றும் நடக்கப்போவதில்லை
உனக்கும் எனக்குமான மரணம்...


Sunday, December 13, 2009

தனிமைத் தோழமை




நீ இல்லாத எனது இந்த இரவுகளில்
என் மீது கால் போட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது தனிமை..
கலைந்து கிடந்த உன் உடைகளில்
ஞாபகமாய் நீ கொடுத்த புகைப்படத்தில்
கிறுக்கி வைத்திருந்த நாட்காட்டியில்
ஒன்று தொலைந்து மீதமிருந்த உன் ஒற்றைச் செருப்பில்
என திரும்பும் இடமெல்லாம் நின்று கொக்கரித்தது...
கசக்கி எரியப்பட்டு ஓரமாய்க் கிடந்த உன் உதடு ஒற்றிய
காகித கைக்குட்டையை எடுத்து பத்திரப்படுத்திய போது
கைக்கொட்டி சிரித்தது..
வழக்கமாய் நீ வரும் வழியில் உன்
காலடிப் பதிவுகளைத் தேட முயல்கையில்
கண்ணில் மண் தூவிய காற்றாய் வெறுப்பேற்றியது...


ஏதோ ஓர் இரவில்
கனவா மயக்கமா வகைப்படுத்த முடியா நிலையில்
உன் வாசனையை
மிக அருகில் உணர்ந்தது போல் இருக்க
தலையிலடித்தது போல நீ அருகில் இல்லாத உண்மை உரைத்ததில்
திடீரென தடம்புரண்டு
உடைந்து போய் அழ ஆரம்பித்த என்னை
பாவமாய் பார்த்துக்கொண்டிருந்த அந்த
நிமிடத்திலிருந்து தோழனாகி
துணையாகவும் இருக்கிறது
தனிமை - நீ
இல்லாமல் போன
இந்த நிமிடம் வரை...

Tuesday, December 1, 2009



தனிமையின் கொடுமையை
நான்
உணர்ந்த்து கொண்டே
இருக்கக்கூடாதென்று
என் மீதும்
பரிதாபப்பட்டு
என் கை கோர்த்து தலை தடவி
ஆறுதலும் கூறிய
அதே தனிமையை
எப்படி கொடுமை என்றே
சொல்லிக்கொண்டு இருப்பது?


Saturday, November 28, 2009



இனி வானில் பறக்கத் திராணி இல்லை..
நானிருந்த இடத்தில் புதுச்சிறகுகள்
முளைத்திருக்கக்கூடும்..
என்னை நினைத்துப் பார்க்கக்கூட நேரமிருக்காது
நான் உதவிக்கொண்டிருந்த உயிருக்கு..
இனி துணை
தனிமையும் முதுமையும் மட்டும் தான்..


Tuesday, November 24, 2009



தனிமை படர்ந்த
விரக்தியின் உச்சத்தில்
மரணத்தின் விளிம்பு வரை சென்று
தப்பி பிழைத்த ஒரு தற்கொலை முயற்சியில் தான்
உறைத்தது..
மரணம் தான் இருப்பதிலேயே
மிகப் பெரிய தனிமையோ ??


Sunday, November 22, 2009


காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்...


Saturday, November 14, 2009



தனிமை கொடியது தான்..
தனியாகவே இருந்து தனிமையை
உணரும் போது கூட அல்ல...
சுற்றி எத்தனையோ பேர்
சூழ்ந்த்திருந்தும்
தன்னந்தனியாக உணரும்
பொழுதில் தான்..


Saturday, August 29, 2009




சாலையோரத்தில் இறங்து கிடந்த
பட்டாம்பூச்சி ஒன்றை
அறியாமல்
மிதித்துவிட்டதிலும்
பதறித்தான் போனது மனம்..
அதற்கு வலித்திருக்காது
எனினும்...


LinkWithin

Related Posts with Thumbnails