Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, June 3, 2011

இருளினூடே சில இசைக்குறிப்புகள்…



நமக்கான இறுதி முடிவை
நாளை சொல்வதாய் நீ
சொல்லி போன அந்த நாளின்
தீராமல் நிலவொளி வடிய
நீண்டு கொண்டே இருந்த
பின்னரவில் தான்
அந்த வயலின் இசை
மெல்ல
அறைக்குள் நுழைந்து
முழுவதுமாய் நிறைந்தது
அதன் சோகம் தாக்கி
உன் முடிவு குறித்து நினைவு திரும்ப
சடசடவென இசைக்குறிப்பின்
குறியீடுகளாய் உதிரத் தொடங்கியது
அடுக்குகள் மாறி விளையாட்டு காட்டி
துள்ளலான இசையாய் மீண்டும்
படர்ந்தது
மெல்லிய‌ விடியல் ஒளியில்
நம்பிக்கைக் கீற்றுத் தெரிய
உறங்கிப்போன என்னை
எழுப்பிய உன் அழைப்பில்
உன் குரல்
இயல்பானதாய் இல்லை
உன் முடிவும்.
எதிர்பார்த்தது போலவும்
எதிர்பாராதது போலவும்.
தளர்ந்து போய் அந்த
இசைக்குறிப்புகளைத் தேடினேன்
விட்டத்தின் அரித்த மிச்சங்களைப் போல
தரையில் தூசியாய் விழுந்திருந்தன
அதன் பின் அந்த‌
வயலின் இசைக்கவே இல்லை

Thursday, April 21, 2011

முத்தப்பொழுதுகள்…



எழுந்து கொள்ள
அறவே விருப்பமற்ற
ஒரு காலையில்
இமைகளின் மேல்
இன்னமும்
அமர்ந்திருக்கின்றன
நேற்று இரவில்
தூங்கச்சொல்லி
நீ
கொடுத்துப்போன
இரண்டு முத்தங்கள்

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

ஒரு முறையாவது
எண்ணிவிட நினைக்கிறேன்
நீ இறைத்துப் போகும்
முத்தங்களை
ஒன்று..இரண்டு..மூன்று
நா…ன்…கு..
ஐ…
இதழ்களும் மனமும்
இழந்து தவிக்கும் தருணம்
குறும்புடன் புன்னகைத்து
சொல்கிறாய்
முதலில் இருந்து
ஆரம்பி என


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

அண்டார்டிகாவில் சூரியன்
இருபது மணி நேரம் இருக்கும்
தெரியுமா
பென்குவின்ஸ் பார்க்க
அது தான் சரியான இடம்
ஒரு முறையேனும்
போகவேண்டும்
ஆர்வத்துடன்
என் வெகு நாள் கனவை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இழைத்தெடுத்த உன் முத்தங்களை
அள்ளித் தெளிக்கிறாய்
உறைந்து கிடக்கும் ஒரு நொடியில்
காதுகளில்
கிசுகிசுக்கிறாய்
எப்ப போகணும் அண்டார்ட்டிகா என்று
அண்டார்டிகா’வாவது!
ஆத்தங்கரையாவது!


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

சிதறி விழுந்த
முத்தங்களின்
நதி தீராமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நம் வீட்டு வாசலில்
தொட‌ங்கி
காற்றில் பன்னீர் தெளிப்பது போல
சாரல் தெறிப்பது போல‌
மெல்ல
ஊர் முழுக்க பரவுகிறது
நம்
முத்தச்சத்தம்


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

நீ தூங்கச்சொல்லி
கொடுத்துப்போன‌
முத்தங்கள் அனைத்தும்
இமைகளை ஊடுருவி
கனவில் கரைந்து
வண்ணங்களாய் குழைந்து
நட்சத்திரங்களாய்
மினுக்குகின்றன
எனக்கான வானில்
என் இரவு முழுவதும்


-0-0-0-0-0-0-0-0-0-0-0-

உச்சந்தலை முகர்ந்து
நெற்றியில் நீ
கொடுக்கும் முத்தமே
மிகப்பிடித்தது என்கையில்
என்ன காரணம் கேட்கிறாய்
காதல் கடந்து காமம் கடந்து
உன் ஆண்மையின்
தாய்மைச்சாயல் தெரியும்
தருணம் என
சொல்லிமுடிப்பதற்குள்ளேயே
நெற்றியில் விழுந்த
முத்தத்திற்காய்
கண்கள் மூடி
புன்னகைக்கிறேன்
இம்முறை விழுந்தது
நெற்றியில் அல்ல!

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

காத‌ல‌ர் தின‌ப்பதிவு போட்டிக்காக‌ அலுவ‌ல‌க‌ வ‌லைப்ப‌திவு குழும‌த்தில் எழுதி ப‌ரிசு பெற்ற‌ க‌விதைப்பதிவு ;)





Tuesday, October 12, 2010

கடைசித்துளி ஈரம்...



நிராகரித்து ஒதுக்கப்படும்
ஒவ்வொருமுறையும்
உருகி வழியும் உயிரை
உள்ளங்கையில்
அள்ளித் தொடர்கிறேன்
மேலும் உருகுதலை
அள்ள முடியாப் பாதரசத்துளியாய்
விரல்கள் வழி கசிந்து
உருண்டோடும் உயிர்த்துளிகள்
சேகரிக்க போதவில்லை
பலமோ மனமோ நேரமோ
போகட்டுமெனப் புறக்கணித்துப்
பின்வருகிறேன்
கண்கள் இருட்டி
காலடிகள் மங்கும்
ஒற்றையடிப் பாதையில்
உன் வாசனையின் தடம் ஒற்றி

கடைசித்துளி ஈரமும்
காயும் முன்னர்
சொல்ல ஆரம்பிக்கிறேன்
நம்பிக்கையின் கதையை
காதலின் வலிமையை
மெல்ல ஈனசுரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
குரலுக்கு இடையேயும்
நல்லதொரு முடிவுக்காய்
இன்னமும்
காத்திருக்கும் கடைசி
சில அணுக்களுக்கேனும்


Thursday, August 12, 2010

தவித்தலும் தவித்தல் நிமித்தமும் [இதுவும் ஓர் இரவு] [1]



கண்ணாடித்துண்டு கீறிய சதையில்
மெல்ல எட்டிப்பார்க்கிறது
ரத்தத்துளி
வ‌லியும் குறுகுறுப்புமாய்

நீரில‌ளைந்து ஊறிப்போன‌ தோலில்
மிச்ச‌மிருக்கும் ஈர‌ம்
சிலிர்க்கச்செய்கிற‌து
மூடிவைத்த‌ க‌த‌வின் உடைச‌லில்
மெலிதாய் நுழையும் காற்று

நீளும் இர‌வின் ஈர‌ப்ப‌த‌ம் மீறி
போர்வையை
வெப்பமாக்கிக் கொண்டிருக்கிற‌து
ஏதோ ஒரு க‌ண‌த்தில் வெளியேறிய‌
பெருமூச்சு

சுற்றிச்சுற்றி சுவ‌ற்றில் மோதுகிறது
வ‌ழிய‌றியாம‌ல் போன‌
த‌ட்டான் ஒன்று

மாலையில் சூடி க‌ளைந்தெறிந்த‌
பூச்ச‌ர‌ம் ப‌ர‌ப்பிக்கொண்டிருக்கிற‌து
த‌ன் ம‌ண‌த்தை எங்கோ
ஒரு மூலையிலிருந்து

ஒற்றை முத்த‌த்தின் அவ‌சிய‌ம்
உண‌ர்த்த‌விய‌லாம‌ல் போனதில்
தளும்பி வெறித்திருக்கிறது
உற‌ங்கா விழிக‌ள்


Thursday, July 22, 2010

பிரியும் ரயிலின் சத்தம் ‍| உன்னுடனான என் உலகம் - 1


*************************(1)**************************

தனிமையுடனான
இனிவரும் பயணம்
க‌டுங்க‌ன‌வுக‌ளைப் போலவே
எளிதாய் இருக்க‌ப்போவ‌தில்லை…

ஏன் எதுவுமே பேசாமல் இருக்கிறாய்
என்ற உனது கேள்விக்கும்
மெளனத்தைத் தவிர‌ என்னிட‌ம்
பதில் எதுவும் இல்லை

வ‌ழ‌க்க‌மான‌ விடைய‌ளிப்புக‌ள்
எவ்வ‌ள‌வோ பார்த்திருந்தும்
இன்னும் எட்டிப்பார்த்திராத
எனது ஒரு க‌ண்ணீர்த்துளியின்
க‌ன‌ம் உண‌ர்ந்தோ என்னவோ
கிளம்புகையில்
என‌க்காய்
அதிர்ந்து அல‌ர்கிற‌து
ர‌யில்...

*************************(2)**************************

பேசிக் கொண்டிருக்கலாம்
என்று சொன்ன‌
ஒரு ரயில் பயணத்தில்‍
அயற்சியில் தூங்கிவிட்ட‌
உன்னை
எழுப்ப மனமில்லாமல்
ஏக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கும்
எனக்காய்
சத்தமிட்டு
எழுப்பப் பார்க்கிறது ரயில்...

******************************************************


Friday, June 11, 2010

அசைவுறும் ச‌ல‌ன‌ம‌ற்ற‌வைக‌ள்...




இதோ
உடல் சில்லிட்டுக் கொண்டிருக்கிறது

உலர்ந்து கொண்டிருக்கும் உதடுகளை
வெறித்துக் கொண்டிருக்கும் கண்களை
வெளிறிக் கொண்டிருக்கும் முகத்தை
சிக்கிக்கொண்டிருக்கும் வார்த்தைகளை
ம‌ங்கலாகிக் கொண்டிருக்கும் நினைவுக‌ளை
ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிரை
பெரிதாய் ஒன்றும் செய்ய‌ முடிய‌ப்
போவ‌தில்லை

எந்நேரமும் நடக்கலாம்
முடிவடைவதோ
முக்தியடைவதோ

சில கணங்களேனும் நீளுமா
உன் உயிர்ச்சூட்டில்
சுவாசக்காற்றில்

தவித்து உருளும் கண்ணீர்த்துளி
உன்னைச் சேரும் நொடியில்
சூழ்கிற‌து
மரண நிசப்தம்

Saturday, February 27, 2010

ஆழ்வெளியில் உதிர்ந்த சிறகு




ஆளரவமே அறியாத
அடையாளமும் இல்லாத
ஏதோ ஒர் அந்தரத்தின்
எங்கோ ஒரு விளிம்பிலிருந்து
தவறி
விழுந்துக்கொண்டே இருக்கிறேன்...
இருட்டுவழியில் முடிவில்லா
இந்த வீழ்பயணமும்
சுகமாகத் தான்
இருக்கிறது
உனக்கான என்
காத்திருத்தலைப் போல...

ஒரு குளிர்மாலையின்
பனியை போல
இதமாய்த் தான்
இறங்கிக்கொண்டிருந்தது
மெல்ல முதுகுத்தண்டில்
கூரூசியாய் ஏறி
உறையவைக்கும் வரை...
உன் பாராமுகம்...

எவ்வளவு இருந்து என்ன
என் அன்பை வெளிப்படுத்த முடியா
வார்தைகள் ஒவ்வொன்றும்
குற்றவுணர்ச்சியில் மடிந்து கொண்டிருக்கின்றன
நெஞ்சுகுழியின் உள்ளேயே...

உனக்கான எனது
யாகத்தின்
வேள்வித்தீயில்
என்னையே அர்ப்பணித்து
வராத கடவுளரிடம்
யாருக்கான வரங்கள்
கேட்பது
இல்லாமல் போன
வாழ்க்கைக்கு...

மெல்ல சாம்பலாகிக்கொண்டிருக்கிறது
என்
கடைசி விறகு...

LinkWithin

Related Posts with Thumbnails