
அவசரமென கடன் கேட்க
கொடுத்த கடனை திரும்ப வாங்க
முதல் ஆளாய் முன்னிற்க
கடைசி ஆளாய் பின்தங்க
தனக்கென ஒரு உதவி கேட்க
இல்லையென மறுத்து சொல்ல
தவறுகளை ஒத்துக்கொள்ள
மன்னிப்பை இறங்கிக் கேட்க
பசியென வேண்டிக்கொள்ள
பசியில்லையென நடிக்க
அகம்பாவமாய் எடுத்தெறிய
எல்லாவற்றிற்கும் பணிந்து போக
கோபத்தில் புயலாய் வீச
அமைதியாய் அனைத்தையும் கடக்க
பாசாங்காய் பாசம் காட்ட
பற்றியெரியும் எரிச்சலிலும் தரந்தாழ்ந்து நடக்க
தன்தரப்பு நியாயங்களைச் சொல்ல
இழைக்கப்பட்ட அநியாயங்களை விளக்க
தயங்கி தயங்கியே கழிந்த நாட்களின்
தயக்கங்கள் இருந்துகொண்டே தான்
இருக்கின்றன தயங்காமல்
காதலைச் சொல்வதிலும்
உயிரை விடுவதிலும்
இன்ன பிற
எல்லா இரண்டுங்கெட்டான்தனத்திலும்