Friday, April 27, 2012

மின்னல் உடைத்த குமிழ்கள்



இயல்புகளை இளக்காரமாக்கி
எக்காளமிடுகிறீர்கள்
இயலாமைகளை பகிரங்கபடுத்தி
கெளரவிக்கிறீர்கள்
ஒரு மண்புழுவைப் போல
எப்போதும் மண்ணிற்குள் தலையை
புதைத்தபடியே வாழச்செய்வதில்
மகிழ்ச்சி கொள்கிறீர்கள்
சரமாரியாக இவ்வாயுதங்களை ஏவி
திக்குமுக்காட வைத்து
களிப்புறீர்கள்

என்னை நோக்கி வீசப்படும் சீற்றங்களை
புறக்கணிப்புகளை சிறுமைப்படுத்துதலை
மற்றுமொரு கண்ணியாக்கி
நான் நீளக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இன்னும் இன்னும் ஆழமாய்
என்னை புதைத்தபடி

உங்களுக்கான எனது நன்றிகளுக்காய்
யாரும் பார்க்காத உயரங்களில்
வளர்ந்து உதிர்ந்த பூக்களின் இதழ்களோடு
மிச்ச‌மிருக்கும் என் பிரிய‌ங்க‌ளையும் உதிர்த்து
என் கனவுகளை ஏமாற்றங்களை
அவமானங்களைச் சேர்த்து
மின்னல்கள் உதிரும் ஒரு
மலைசிகரத்தின் அறியாத ஒரு பள்ளத்தில்
புதைத்துவைப்பேன்
காட்டுத்தீயில் க‌ருகி
மிச்ச‌மிருக்கும் வேர்க்கூடுக‌ளுக்குத்
துணையென‌

அவை விதையென ஒரு விருட்சத்தை
விளைவிக்கும்
நான் பார்க்க இல்லை எனினும்
பிறிதொரு கோடைகாலத்தின்
தங்க நிற மாலையில் அவ்விருட்சம்
பூக்கும்
அத‌ன் மொட்டுகள் விரிந்து
வனமெங்கும் படரும்
வண்ணத்துபூச்சிகளின் சிறகுகள்



1 comment:

Anonymous said...

kalam orunaal marum. nam kavalaigal yavum neengum.

LinkWithin

Related Posts with Thumbnails