Tuesday, October 12, 2010

கடைசித்துளி ஈரம்...



நிராகரித்து ஒதுக்கப்படும்
ஒவ்வொருமுறையும்
உருகி வழியும் உயிரை
உள்ளங்கையில்
அள்ளித் தொடர்கிறேன்
மேலும் உருகுதலை
அள்ள முடியாப் பாதரசத்துளியாய்
விரல்கள் வழி கசிந்து
உருண்டோடும் உயிர்த்துளிகள்
சேகரிக்க போதவில்லை
பலமோ மனமோ நேரமோ
போகட்டுமெனப் புறக்கணித்துப்
பின்வருகிறேன்
கண்கள் இருட்டி
காலடிகள் மங்கும்
ஒற்றையடிப் பாதையில்
உன் வாசனையின் தடம் ஒற்றி

கடைசித்துளி ஈரமும்
காயும் முன்னர்
சொல்ல ஆரம்பிக்கிறேன்
நம்பிக்கையின் கதையை
காதலின் வலிமையை
மெல்ல ஈனசுரத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும்
குரலுக்கு இடையேயும்
நல்லதொரு முடிவுக்காய்
இன்னமும்
காத்திருக்கும் கடைசி
சில அணுக்களுக்கேனும்


Tuesday, October 5, 2010

அறியாக் காரணம்…

தலைவலிகள் எப்போதும்
பெரிய தலைவலி தான்
ஒற்றைத் தலைவலி
அத‌னினும் கொடுமை
ஏன் தான் இப்படி வலித்துதொலைகிறது
கோபப்பட்டிருக்கிறேன் பலமுறை

நேற்று முத‌ல்முறையாய்
நீ இருக்கும்போது வ‌ந்த‌
த‌லைவ‌லியிட‌ம் இன்னும் கோப‌ம்

நீயோ
மெல்ல‌ தைல‌ம் தேய்த்தாய்
லேசாய் கை வைத்து
அழுத்த‌ம் கொடுத்தாய்
மிக‌ இத‌மாய் உன் கைச்சூட்டை
என் நெற்றிக்கு இட‌ம் மாற்றினாய்
போர்வை போர்த்தி
த‌லை கோதினாய்
அருகிலேயே இருந்து
அர‌வ‌ணைப்ப‌ளித்தாய்
வ‌லித்த‌ இட‌த்தில்
இத‌மாய் ஒரு முத்த‌மும்

மாய‌மாய் ம‌றைந்த‌
த‌லைவ‌லியும்
சுக‌மாய் வ‌ந்த‌ தூக்க‌மும்
சொல்லாம‌ல்சொல்லிவிட்டு போன‌து
இத்த‌னை நாளாய்
த‌லைவ‌லி வ‌ந்து வ‌ந்து போன
கார‌ணத்தை!



Wednesday, September 15, 2010

த‌ய‌க்கங்க‌ள்…

















அவச‌ர‌மென கடன் கேட்க‌
கொடுத்த கடனை திரும்ப வாங்க‌
முத‌ல் ஆளாய் முன்னிற்க‌
க‌டைசி ஆளாய் பின்தங்க
தனக்கென ஒரு உத‌வி கேட்க
இல்லையென ம‌றுத்து சொல்ல‌
த‌வ‌றுக‌ளை ஒத்துக்கொள்ள‌
ம‌ன்னிப்பை இற‌ங்கிக் கேட்க‌
ப‌சியென வேண்டிக்கொள்ள‌
ப‌சியில்லையென‌ ந‌டிக்க‌
அக‌ம்பாவ‌மாய் எடுத்தெறிய‌
எல்லாவ‌ற்றிற்கும் ப‌ணிந்து போக‌
கோப‌த்தில் புய‌லாய் வீச‌
அமைதியாய் அனைத்தையும் க‌ட‌க்க‌
பாசாங்காய் பாசம் காட்ட
பற்றியெரியும் எரிச்சலிலும் தரந்தாழ்ந்து நடக்க
த‌ன்த‌ர‌ப்பு நியாய‌ங்க‌ளைச் சொல்ல‌
இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநியாய‌ங்க‌ளை விள‌க்க‌

தயங்கி தயங்கியே கழிந்த நாட்களின்
த‌ய‌க்கங்க‌ள் இருந்துகொண்டே தான்
இருக்கின்ற‌ன‌ த‌ய‌ங்காம‌ல்

காதலைச் சொல்வதிலும்
உயிரை விடுவதிலும்
இன்ன பிற
எல்லா இர‌ண்டுங்கெட்டான்த‌ன‌த்திலும்

Tuesday, August 24, 2010

என்ன‌ தான் செய்வ‌து... [இதுவும் ஒர் இர‌வு][2]



அது நடந்திருக்கக்கூடாது அன்று
நடந்திருக்கவே கூடாது
விடிய‌ விடிய‌
மழையாவது பெய்யாம‌ல் இருந்திருக்கலாம்
இத‌மான‌ குளிருட‌ன் அமையாத‌
இரவாய்
வெப்ப‌த்தில் வ‌றுத்தெடுத்திருக்க‌‌லாம்
தூக்க‌ம் வ‌ர‌வில்லையென
ந‌ள்ளிர‌வு தாண்டியும்
பேசாமல் இருந்திருக்கலாம்
த‌னிமையின் அவ‌ல‌ம்
ப‌ற்றி பேச்சு திரும்பாமல் வேறு
ஏதேனும் பேசியிருக்கலாம்
வேண்டுமென நினைத்ததையெல்லாம்
இப்ப‌டி வ‌ரிசையாய் வேண்டாம்
வேண்டாமென புல‌ம்பாம‌லாவ‌து இருக்க‌லாம்
அன்றிருந்த‌து போல‌வே ஏதோவொரு
வெறுப்பிலும் விர‌க்தியிலும்
கால‌ம் க‌ட‌த்தியிருக்க‌லாம்
த‌னியாய் உற‌ங்க‌ப்போகும் முன்
உதித்த‌ முத‌ல் க‌விதையை
என்ன‌ தான் செய்வ‌து


Thursday, August 12, 2010

தவித்தலும் தவித்தல் நிமித்தமும் [இதுவும் ஓர் இரவு] [1]



கண்ணாடித்துண்டு கீறிய சதையில்
மெல்ல எட்டிப்பார்க்கிறது
ரத்தத்துளி
வ‌லியும் குறுகுறுப்புமாய்

நீரில‌ளைந்து ஊறிப்போன‌ தோலில்
மிச்ச‌மிருக்கும் ஈர‌ம்
சிலிர்க்கச்செய்கிற‌து
மூடிவைத்த‌ க‌த‌வின் உடைச‌லில்
மெலிதாய் நுழையும் காற்று

நீளும் இர‌வின் ஈர‌ப்ப‌த‌ம் மீறி
போர்வையை
வெப்பமாக்கிக் கொண்டிருக்கிற‌து
ஏதோ ஒரு க‌ண‌த்தில் வெளியேறிய‌
பெருமூச்சு

சுற்றிச்சுற்றி சுவ‌ற்றில் மோதுகிறது
வ‌ழிய‌றியாம‌ல் போன‌
த‌ட்டான் ஒன்று

மாலையில் சூடி க‌ளைந்தெறிந்த‌
பூச்ச‌ர‌ம் ப‌ர‌ப்பிக்கொண்டிருக்கிற‌து
த‌ன் ம‌ண‌த்தை எங்கோ
ஒரு மூலையிலிருந்து

ஒற்றை முத்த‌த்தின் அவ‌சிய‌ம்
உண‌ர்த்த‌விய‌லாம‌ல் போனதில்
தளும்பி வெறித்திருக்கிறது
உற‌ங்கா விழிக‌ள்


Thursday, July 22, 2010

பிரியும் ரயிலின் சத்தம் ‍| உன்னுடனான என் உலகம் - 1


*************************(1)**************************

தனிமையுடனான
இனிவரும் பயணம்
க‌டுங்க‌ன‌வுக‌ளைப் போலவே
எளிதாய் இருக்க‌ப்போவ‌தில்லை…

ஏன் எதுவுமே பேசாமல் இருக்கிறாய்
என்ற உனது கேள்விக்கும்
மெளனத்தைத் தவிர‌ என்னிட‌ம்
பதில் எதுவும் இல்லை

வ‌ழ‌க்க‌மான‌ விடைய‌ளிப்புக‌ள்
எவ்வ‌ள‌வோ பார்த்திருந்தும்
இன்னும் எட்டிப்பார்த்திராத
எனது ஒரு க‌ண்ணீர்த்துளியின்
க‌ன‌ம் உண‌ர்ந்தோ என்னவோ
கிளம்புகையில்
என‌க்காய்
அதிர்ந்து அல‌ர்கிற‌து
ர‌யில்...

*************************(2)**************************

பேசிக் கொண்டிருக்கலாம்
என்று சொன்ன‌
ஒரு ரயில் பயணத்தில்‍
அயற்சியில் தூங்கிவிட்ட‌
உன்னை
எழுப்ப மனமில்லாமல்
ஏக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கும்
எனக்காய்
சத்தமிட்டு
எழுப்பப் பார்க்கிறது ரயில்...

******************************************************


Tuesday, July 6, 2010

நீளும் கணங்கள்...



காத்திருக்கும் பொழுதுகளில்
பெருகிய‌ழுத்தும் கனம்
மொத்தமும்
ஒற்றை முத்தத்தில்
துடைத்தெறிந்த‌
அந்தக் கணத்தில்
இருந்து
அதற்காகவே
காத்திருக்கத் தொடங்கியது
உனக்காய்
காத்திருந்த அனைத்து
பொழுதுகளும்…


Friday, June 11, 2010

அசைவுறும் ச‌ல‌ன‌ம‌ற்ற‌வைக‌ள்...




இதோ
உடல் சில்லிட்டுக் கொண்டிருக்கிறது

உலர்ந்து கொண்டிருக்கும் உதடுகளை
வெறித்துக் கொண்டிருக்கும் கண்களை
வெளிறிக் கொண்டிருக்கும் முகத்தை
சிக்கிக்கொண்டிருக்கும் வார்த்தைகளை
ம‌ங்கலாகிக் கொண்டிருக்கும் நினைவுக‌ளை
ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிரை
பெரிதாய் ஒன்றும் செய்ய‌ முடிய‌ப்
போவ‌தில்லை

எந்நேரமும் நடக்கலாம்
முடிவடைவதோ
முக்தியடைவதோ

சில கணங்களேனும் நீளுமா
உன் உயிர்ச்சூட்டில்
சுவாசக்காற்றில்

தவித்து உருளும் கண்ணீர்த்துளி
உன்னைச் சேரும் நொடியில்
சூழ்கிற‌து
மரண நிசப்தம்

Monday, April 26, 2010

துளிர்ப்பிற்காய்..




துடிதுடித்து கொதித்து ஆவியாகி மறைந்த
அதிவெப்பப்பரப்பில் விழுந்த
ஒற்றை நீர்த்துளியைப் போல
எந்த வெளியில் காணாமல் போனதென
வானம் வெறித்திருந்து
யுகங்களாய் கடந்த பொழுதுகளின்
கண்ணயர்ந்த ஒர் எதிர்பாரா கணத்தில்
எங்கோ தனை எதிர்கடந்த
வாடைக்காற்றின் நேசம் புணர்ந்து
பெருமழையாய்ப் பெய்து
உயிர் நனைத்தது
மென்மனதின் ஆழம் ஒட்டியிருந்த
கடைசித்துளிக் காதல்...



Sunday, March 21, 2010

நம்பிக்கையின் கடவுள்...



Hope Originally uploaded by cknara

பசியில் மெதுவாய் எட்டிப் பார்த்திருக்கும்
எனது கண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது
எம் வறுமையைப் போலவே....
இழுத்துப் பிடிக்கும் வயிற்றைப் போல
இறுக்கிக் கொண்டிருக்கிறது
தாளாத் துயரின் கோரப்பிடி...

எதிர்துருவமாய் இருக்கிறது என் வாசலுக்கு
வெளியேயான உலகம்...
விளையாட்டுப் பொருட்களுக்காய் அழுது
அடம்பிடிக்கும் என் வயது சிறுவர்கள்...
என் கண்ணீரோ மெல்ல தொலைந்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கைக்கும் அதனுடன் சேர்ந்து
மூழ்கிக்கொண்டிருக்கும் என் கனவுகளுக்கும்...

வழுக்கிக் கொண்டு செல்லும் வெப்பம் தீண்டாத
இசையில் அதிர வைக்கும் சொகுசு ஊர்திகள்...
செருப்பு தேய இடமில்லாமல் தானும் தேய்ந்து
காய்ப்பு காத்திருக்கும் என் பாதங்கள்...

பாலும் பஞ்சாமிர்தமுமாய் குளியல்கள்
எம் கடவுள்களுக்கு...
வீசியெறியப்பட்ட ரொட்டித்துண்டு ஒன்றினை
யாரும் பார்க்கும் முன்னர் பொறுக்கியெடுக்கும்
எனது கைகள்...

மண்ணைத்தின்ற வாயிலும்
என் ஆடைக்கிழிசல்களின் இருளிலும்
இன்னொரு உலகம் காட்டிகொண்டிருக்கும்
நானும்
கடவுளின் பிரதி தான்...
சொல்லிய அத்தனைக்கும்
சொல்லாமல் போன எத்தனையோவற்றிற்கும்
எதுவுமே செய்ய முடியாமல் போன
நம்பிக்கைகள் மட்டுமே மிச்சமிருக்கும்
கடவுளின் இன்னொரு பிரதி...

நானும் ஓர்
நம்பிக்கையின் கடவுள்...

LinkWithin

Related Posts with Thumbnails